சுவரை விற்றா சித்திரம்?

       காவிரி, தென்பெண்ணை, பாலாறு, தமிழ் கண்டதோர் வையை பொருநை நதி… கேட்கவே மிகவும் இனிமையான குளிர்ச்சியான வரிகள்.. பாலாறு, நொய்யலாறு, சேர்வலாறு, குண்டாறு, இன்னும் எத்தனை எத்தனை ஆறுகள்..
தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவி, முக்கிய நதி, கிளை நதி, கால்வாய், வாய்க்கால் என ஒவ்வொரு மூலை முடுக்கெல்லாம் நதியின் தடம்.. பொங்கிப்பெருக்கெடுக்கும் நதி, தன்னை சார்ந்த மக்களுக்கு அமுதம் ஊட்டும் அன்னையாக, அன்பை குளிர்ந்தளிக்கும் மனைவியாக, தாவி குதித்து நடக்கும் இளமங்கையாக, துள்ளி விளையாடும் குழந்தையாக இன்னும் எத்தனை எத்தனை உவமைகளுக்கு உருவம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. தன் போக்கில் செல்லும் நதியை இயற்கையும், இலக்கியமும் போற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட நதிகளுக்கு நாம் என்ன செய்கிறோம். ? நமக்கு உணவூட்டும் நிலங்களுக்கு உயிரூட்டும் நதிகளை சுரண்டுகிறோம்.. நதியின் பாதைகளை ஆக்கிரமிப்பால் குறுக்குகிறோம்.. குப்பைகளை கொட்டி சாக்கடையாக்குகிறோம். இனி ஒன்றுமில்லை என்று வெறுமையாய் படர்ந்திருக்கும் நதியின் மணலையும் அடியோடு அரித்து விடுகிறோம்.
எதற்காக இந்த ஆக்ரோஷம்? ஏன் இந்த கொடூரம்..எதற்காக இத்தனை வன்மம்..  எத்தனை நதிகளின் மரணங்களை கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்…. ஆனால் அதற்காக அக்கறை கொள்கிறோமா?
நான் பாலாற்றின் கரையோரம் வளர்ந்தவள்.. எனக்கு நினைவிருக்கிறது ஒரு பெரு மழை நாளில் ஊரை வெள்ளம் சூழ்ந்தது. அதுபோன்ற நிகழ்வை என் வாழ்நாளில் அனுபவித்ததே இல்லை.. வெள்ளம் வடிந்த பிறகு ஊ.ர் பாலத்தை கடந்து சென்ற அந்த நேரத்தில்தான் நான் நதியின் பிரம்மாண்டத்தை பார்த்தேன்.. கிட்டதட்ட கடைசியாக அப்படியொரு பிரம்மாண்டத்தை காட்டியது அந்த ஆறு..
அதன் பின்னர் வந்த மழைக்காலங்களில் பாலாறு கரை மீறவில்லை..அதன் பிறகு… அதற்கும் பிறகு வந்த மழைக்காலங்களில் பாலாறு மெல்லியதான ஓடையாக மாறியது. இப்போது வெறும் முட்செடிகள் மண்டிய புதராகத்தான் பார்க்க முடிகிறது அந்த ஆற்றை… இனி எப்போதும் நிரம்பாது அந்த ஆறு.. அதன் மணல்பரப்புகள் இன்று எத்தனையோ ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான வீடுகளாக உருமாறி விட்டன. இன்னும் சுரண்டப்படுவதில் இருந்து தப்பவில்லை அந்த நதி.. இப்படி காவிரி, தென்பெண்ணை, வைகை என்று பெயர் பெற்ற நதிகள் தொடங்கி ஒவ்வொரு நதியும் மணலை இழந்து கொண்டிருக்கின்றது. அரசு குவாரிகள், இரண்டாம் நிலை மணல் விற்பனை நிலையங்கள், தனியார் குவாரிகள் என்று முறைபோட்டு அள்ளப்படுகிறது மணல்.. காவிரி பாயும் பகுதிகளில் உள்ள மணலை அள்ளியவர்கள் அங்கு அபாயகர குழிகளையும் குளங்களையும் உருவாக்கிவிட்டார்கள்.. இன்னும் எத்தனை எத்தனையோ நீர்நிலைகளின் மணல் பரப்பும் சூறையாடப்பட்டுவிட்டன.
5 ஆண்டுகளுக்கு மேல் ஒரு மணல் குவாரி செயல்படக்கூடாது… சுற்றுச்சூழல் அனுமதிபெற்ற பிறகுதான் மணல் குவாரி தொடங்கப்பட வேண்டும்.. 3 அடிக்கு மேல் மணல் அள்ளக்கூடாது என்று எத்தனையோ விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால் பெயரளவில் இருக்கும் அந்த விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதே இல்லை…இன்னும் போதாது தொடர்ந்து மணல் அள்ள அனுமதி வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் கேட்கிறது அரசு.. மணல் அள்ளப்படுவதும், அவற்றை கடத்திச்சென்று அதிக விலைக்கு விற்பதும் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன. ஆனால் ஒரு மணல் பரப்பு உருவாக ஒரு நாள் அல்ல, ஒரு வருடம் அல்ல… பல்லாயிரம் வருடங்கள் தேவை.. நீர்நிலைகளை ஒட்டிய பாறைகளும், கற்களும் கரைந்து கரைந்து மிகப்பொடியான மணலாக உருமாற எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் பிடிக்கின்றன. ஆனால் அந்த மணல் பரப்பை அழிக்க ஒரிரு நாட்களே போதுமானதாக இருக்கின்றன என்பது இயற்கைக்கு எதிரான எத்தகைய வன்மமான விஷயம்!.. ஆனால் அந்த நிகழ்வு மிகவும் சர்வசாதாரணமாக இங்கு அரங்கேறிக் கொண்டிருக்கிறது. வெறும் மணல்தானே என்பவர்களா நீங்கள்? அதற்கு ஏன் இத்தனை கூக்குரல் என்று கேட்பவரா நீங்கள்? இதில் என்ன இருக்கிறது என்று அலட்சியம் காட்டுபவரா நீங்கள்?
கொஞ்சம் உன்னிப்பாக பாருங்கள்… மேகத்தில் இருந்து மழை பொழிகிறது.. அதன் ஒவ்வொரு துளியும் பூமியை எட்டுகின்றது. அத்தனையும் பூமிக்கும் போக வேண்டும்.. நிலத்தடி நீராக ஓடி பூமியை செழிக்கச் செய்ய வேண்டும்.. பருவமழையோ, சாரல் மழையோ, தூறலோ மழையின் துளிகள்தான் பூமியின் உயிர்களை உயிர்ப்பிக்கின்றன. அந்த மழையை பூமிக்கு தேக்கி கொடுக்கும் வேலையைத்தான் செய்கிறது மணல்..
ஆனால் ஒரு பிடி கூட மிச்சம் இல்லாத வகையில் சுரண்டப்படுகிறது மணல்…மணல் சுரண்டப்பட்ட இடத்தில் என்ன நடக்கும்? பெய்யும் மழை தேங்காமல் பெரு வெள்ளமாக உருமாறும்..அந்த வெள்ளம் வீணாக கடலில் கலக்கும்.. போகும் வழியெங்கும் சுருட்டியோடும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படப் போவது யார்? மக்கள்தானே… இப்படியே போனால் என்னவாகும்? அச்சம் எழவில்லையா? ஒருசுனாமி காட்டிய பேரழிவை இன்னும் ஒரு வெள்ளம் காட்டிச்செல்ல வேண்டுமா?
நம்மை கூட விடுங்கள்… என்ன விட்டுச்செல்லப்போகிறோம் நம் பிள்ளைகளுக்கு.. நம் சந்ததிகளுக்கு… ?மணல்இல்லா ஆறுகள், விவசாயம் செய்யாத வெற்று நிலங்கள்.. சுத்தமில்லாத தண்ணீர்.. பிளாஸ்டிக் மாசுபட்ட பூமி, தூசியும், அழுக்கும் நிறைந்த காற்று…..இதைத்தானா விட்டுச்செல்லப்போகிறோம்.. ?
இயற்கைக்கு எதிராக நாம் எடுத்து வைக்கும் அடிகள் எல்லாம் நம்மை நோக்கியே பேரிடியாக விழப்போகின்றன என்ற எதிர்க்கால அச்சம் மனதை சூழ்கிறது.குழந்தைப்பருவத்தில் நதியோரம் அமர்ந்து நிலாச்சோறு சாப்பிட்ட அந்த நதிகளை தொலைக்கிறோம்…நதிகளை ஒட்டி நாகரீகம் வளர்த்த மனித சமூகமே அதன் அழிவுக்கும் காரணமாக இருக்கிறது..
இயற்கையை அழித்து வெறும் பணத்தால் என்ன சாதிக்கப்போகிறோம்? மவுனம் சாதிக்கும் இயற்கை பல மர்மங்களோடும் அபாயங்களோடும் காத்திருக்கிறது. நமக்கான பூமியை நாம் பாதுகாப்போம்…. நம் ஒவ்வொருவருக்காகவும் பாதுகாப்போம்.. ஒரு சின்ன மாற்றம் போதும்.. மலரும் பூமி நம்மை வாழ வைக்கும்..
பார்வதிபாமா