சிறு புல்லும் காசு தரும்

     நெல் சாகுபடி மிகவும் குறைந்து விட்டதால் கால்நடைகளின் முக்கிய உலர்தீவனமான வைக்கோலுக்குப் பற்றாக்குறை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இன்னொரு புறம் தீவனப்பயிர்கள் பயிரிடும் பரப்பும் குறைந்துகொண்டே வருகிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை பசுந்தீவனத்திற்கு 60% அளவிற்கும்  உலர்தீவனத்திற்கு  74% அளவிற்கும் பற்றாக்குறையும் நிலவுகிறது. அதனால் தீவனப்பயிர்களின் உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்குத் தீர்வாய் அமைந்துள்ளன கோவை வேளாண்மை ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ள இந்த கோ-3, கோ-4 வகை பசுந்தீவனங்கள்.

இந்த கோ-3, கோ-4 புல்வகைகள் தென்னிந்தியாவின் தட்பவெட்பநிலைக்கு மிகவும் ஏற்றவை. இவ்வகை தீவனப் புற்கள் நீர்ச்சத்தும் சுண்ணாம்புச்சத்தும் (Calcium) நிறைந்தவை. ‘கோ-3’ ஐ விட ‘கோ-4’ இல் சுண்ணாம்புச் சத்து அதிகம். இதன் வேர்கள் ஆழமாகவும் பரவலாகவும் இருப்பதால் கனத்த மழையில் மண்ணரிப்பைத் தடுப்பதற்கும் பயன்படுகிறது. இவை ஓரளவு வறட்சியைத் தாங்கி அடர்த்தியாய் வளரக்கூடியவை. தமிழக அரசு   2012-2013ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் பசுந்தீவன உற்பத்தி மேம்பாட்டிற்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்தீவனப்புல் பயிர் செய்யப்படும் ஒவ்வொரு கால் ஏக்கருக்கும் சூ3,000 மானியம் வழங்கப்படுகிறது.

எப்படிப் பயிரிடுவது?
 
மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, கள்ளிக்குடி யூனியன், வெள்ளாகுளம் கிராமத்தில் உள்ள பிரபாகரன், கடந்த 7 ஆண்டுகளாக கோ-3, கோ-4 பசுந்தீவனங்களை பயிர்செய்து வருகிறார்.

பயிரிடும் முறையைப் பற்றி அவர் விவரிக்கிறார்:  வாய்க்கால் பாத்தி கட்டி, 2 க்கு 2 அடி இடைவெளி விட்டு,  இந்த கோ-3, கோ-4 வேர்க்கரணைகளை கரும்பைப்போல் நட வேண்டும். அடி உரம் சாணம் போதும். மேற்கொண்டு வளர்ச்சிக்கு செயற்கை உரங்களான யூரியா, பொட்டாஷ் இட வேண்டும். மழைநீர் அத்தியாவசியத் தேவை இல்லை. இறவைக் கிணற்று நீர்ப்பாசனம் வாயிலாக சுத்தமான நீர் இருந்தால் போதுமானது. 8 நாளுக்கு ஒரு முறை தண்ணீர் விட வேண்டும். ஒரு வாரத்துக்கு தண்ணீர் இல்லாமல் இருந்தால் கூட பசுமை மாறாது இருக்கும்.

மற்ற பருவப்பயிர்களைப்போல் அல்லாது, தண்ணீர் இருந்தால் ஆண்டு முழுவதும் வளர்த்து அறுவடை செய்யலாம். தரை மட்டத்திலிருந்து 8-10 செ.மீ. விட்டு அறுவடை செய்வதன் மூலம் புல் மீண்டும் வேகமாக வளரும். நட்டதிலிருந்து 90வது நாளில் முதல் அறுவடை செய்யலாம். அதற்கடுத்து 45 நாளுக்கு ஒரு முறை தொடர் அறுவடை செய்யலாம்.    சிறப்பு பாதுகாப்பு முறைகள் ஏதும் இதற்குத் தேவையில்லை" என்று பயிரிடும் முறைகளை விவரிக்கும் பிரபாகரன், ஓராண்டுக்கு ஒரு ஏக்கர் நிலத்தில் 110 டன் அளவு விளைச்சல் காணமுடியும்.’ உரிய பராமரிப்பு இருந்தால் 10 வருடம் கூட இது பயன் தரக்கூடும்" என்கிறார் அவர்.

செலவும் வரவும்
 
இப்பயிரின் 1,000 வேர்க்கரணைகள் கொண்ட கட்டு ரூபாய் 350க்கு கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் விற்கப்படுகிறது. நன்கு வளர்ந்த ஒரு கட்டுப்புல் ரூபாய் 5 முதல் ரூபாய் 8 வரை சந்தையில் விலைபோகிறது. ‘பயிரை அறுத்ததிலிருந்து 24 மணி நேரத்தில் இத்தீவனத்தைப் பயன்படுத்த வேண்டும், இல்லையென்றால் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் அழுகி விடும்" என்று விவசாயிகளுக்குப் பயனுள்ள தகவலையும் தந்தார் பிரபாகரன். மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி, மேலூர், அவனியாபுரம் போன்ற ஊர்களிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இந்தத் தீவனப் புல் பயிரிடப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவர்மேடு கிழக்குப் பகுதியைச் சேர்ந்த விவசாயி பாலாஜி, கடந்த 13 ஆண்டுகளாக தனது 2 ஏக்கர் நிலத்தில் பசுந்தீவனம் உற்பத்தி செய்து வருகிறார்.

என்னோட நிலத்தில் முழுமையான இயற்கை உரங்களை மட்டும்தான் பயன்படுத்துறேன்’ என்று சொல்லும் பாலாஜி, ‘செலவினங்கள் என்று  பார்த்தா ஒரு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஒரு ஏக்கருக்கு 7 டன் வரை பசுந்தீவனம் கிடைக்கும். ஒரு நாளைக்கு தோராயமாக 300 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்" என்கிறார் அவர்.

கால்நடைகளின் தோழன்  
 
மாடுகளுக்கு கலப்புத்தீவனம் கொடுப்பதைவிட பசுந்தீவனம் கொடுப்பதால் செலவினங்களைக் குறைக்க முடியும். பசுந்தீவனங்களில் புரதம், தாது உப்புகள், உயிர்ச் சத்துக்கள் குறிப்பாக உயிர்ச்சத்து ஏ மற்றும் இ ஆகியவை உலர்தீவனத்தில் உள்ளதை விட அதிகமாக உள்ளன. பசுந்தீவனப் புரதத்தில் ஆர்ஜனின், லைசின் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. கோ-3, கோ-4 இவ்வகைப் புல்களில் புரதச்சத்து 5 லிருந்து 10 சதவிகிதம்வரை உள்ளது. 10 மாடுகளுக்கு ஒரு ஏக்கர் தீவனப்புல் போதுமானது" என்று சொல்லும் பாலாஜிதான் வளர்க்கும் பசுக்களுக்கு பசுந்தீவனத்தையே தீவனமாகக் கொடுக்கிறார்.

விவசாயிகளின் உற்ற தோழனாய் திகழும் இந்த கோ-3, கோ-4 இனி வரும் காலங்களில் தீவனப் பற்றாக்குறையைப் பெரிதும் குறைக்கும் என்பதில் ஐயமில்லை. அதிலும் இது நம் தமிழ்நாட்டின் அறிவியல் உருவாக்கம் என்பது நமக்குப் பெருமையே!

தொடர்புக்கு : 98406 90222 (பாலாஜி)
98436 37287 (பிரபாகரன்)
 
வல்லுனர் விளக்கம்

‘‘ஒரு ரூபாய் செலவு செய்தால் மூன்று ரூபாய் லாபம்’’

டாக்டர். எ. கலாமணி
பேராசிரியர் மற்றும் தலைவர், தீவனப் பயிர்த் துறை
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவை

எந்தப் பருவ நிலையையும் சமாளித்து வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய பயிர். பருத்தி, கரும்பு போலவே இதையும் பணப் பயிர் என்று சொல்லலாம். கம்பு, நேப்பியர் புல் இரண்டையும் இனக்கலப்பு செய்துகொண்டு வந்த ரகம் கோ 4. இது பல்லாண்டு பயிர். ஒருமுறை பயிரிட்டால்  4 ஆண்டுகளுக்கு அறுவடை செய்யலாம். சாறு இனிப்பாக இருக்கும் (சர்க்கரை சத்து 3.4%). தண்டு மிருதுவானது. 6 அடி உயரம் வரை வளரும். ஆனால் சாயாது. கணுக்களை நட்ட 70 நாட்களில் முதல் அறுவடைக்குத் தயாராகிவிடும். அதிலிருந்து ஒவ்வொரு 45 நாட்கள் இடைவெளியில் ஆண்டிற்கு 7 முறை அறுவடை செய்யலாம். ஒரு ரூபாய் செலவு செய்தால் 3 ரூபாய் லாபம்  தரக்கூடியது என்பதால் விவசாயிகள் தாராளமாகப் பயிரிடலாம்".

என். ஹரிபிரசாத் மற்றும் க. ராஜேஷ்